Sunday, January 19, 2020

திருச்செந்தூர் மணி அய்யர்

ஞாயிறு காலை அசோக் நகர் ஆஞ்சநேயரை தரிசித்து விட்டு வண்டியை எடுத்தால் செம பசி. சுற்றிலும் சங்கீதா தெசி, குப்தா பவன், கிருஷ்ணா பவன் என சைவ உணவகங்கள்.


திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்தால் அடுத்து செய்தாக வேண்டிய கடமை மணி அய்யர் மெஸ்ஸில் டிபன் சாப்பிடனும் என்று அங்கு சென்றவர்கள் சிலாகித்து கேட்டதுண்டு. புதிதாக சென்னையில் அதுவும் அசோக் நகரில் அவர்களின் கிளை ஆரம்பித்துள்ளனர் என்று அன்பர் கேபிள் சங்கர் பிளாக்கில் பதித்த நியாபகம். சரி இன்று சுவைத்து பார்த்துவிடலாம் என்று மணி அய்யர் ஹோட்டல் செல்வதாக முடிவானது.


வண்டியை பார்க் செய்து விட்டு வந்து தரை தளத்தில் உள்ள சேரில் அமர்ந்தால் நூறு ரூபாய்க்கு அன்லிமிடெட் டிபன் என்ற நோட்டீஸ் கண்ணில் பட்டது. சர்வரிடம் கேட்டதர்க்கு முதல் மாடியில் தான் பஃபே என்றார். சரி என்று மினி டிபன் (50₹) ஆர்டர் செய்தோம்.



மினி டிபன் பெயருக்கு ஏற்றார் போல் மினி வடையுன் வந்தது. ஒரு ஸ்கூப் வென்பொங்கல், இட்லி, முறுகலான தோசை மற்றும் கொஞ்சம் கேரட் அல்வா. முதலில் அல்வாவை ஒரு வில்லல் எடுத்து சுவைக்க... நெய் கலந்த தெய்வீகமான சுவை. அரைத்து விட்ட சாம்பார், மூன்று வகை சட்னி, இட்லி பொடி, நல்லெண்ணெய் மற்றும் சக்கரை(காபியில் கலக்க) என தேவையான condiments எல்லாம் டேபிளில் ஏற்கனவே வைத்திருந்தனர். மகிழ்ச்சி. ஒவ்வொரு தடவையும் சர்வரை கூப்பிட வேண்டிய அவசியமில்லை. அந்த வயதான சர்வர் பொடியை போட்டுக்கோங்கோ எண்ணையை ஊத்திக்கோங்கோ என செம கவனிப்பு. பொடிக்கு தனியாக காசு வாங்கற உணவகங்களில் கூட இப்படி சொல்ல மாட்டார்கள். என்னடா எல்லாமே நல்லா அமையுதே நம்ம வாழ்க்கை இப்படி போகாதே என்று நினைத்த நொடி சற்று கடினமான இட்லி அகப்பட்டது. சாம்பாரும் சட்னியும் நல்லா இருந்ததால் சாப்பிட முடிந்து. பொங்கலும் தோசையும் நன்று.




கடைசியாக டபரா செட்டில் மினி ஃபில்டர் காபி சர்க்கரை இல்லாமல் வந்தது. நாம் தான் சர்க்கரை போட்டுக்கொள்ள வேண்டும் போல். ஃபேஷ் ஃபேஷ். அனைத்து டிபன் வகையறாவும் சுவைக்க ஐம்பது ரூவா சல்லி விலைதான். என்ன இட்லி மட்டும் மிருதுவாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

முகவரி:
Hotel Tiruchendur Mani Iyer
31/69, 7th Ave, Sarvamangala Colony, Indira Colony, Ashok Nagar, Chennai

Saturday, January 11, 2020

ஹோட்டல் பாண்டியாஸ்

வடசென்னையில் குறிப்பாக ஜார்ஜ் டவுன் ராயபுரம் ஏரியாக்களில் பிரியாணி கேட்டால் புலாவ் மாதிரி ஒரு தேங்காய்பால் சோற்றுக்கலவை தருவார்கள். இன்று அதை தென் சென்னையிலேயே சுவைக்க நேர்ந்தது.
 

மதிய உணவிற்கு வடபழனி ஃபோரம் மாலிற்கு அடுத்து அமைந்துள்ள பாண்டியாஸ் செல்ல நேர்ந்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு வந்தபோது ஏசியெல்லாம் இருந்த மாதிரி நியாபகம் இல்லை. ஆனால் இப்பொழுது ஏசி, சைனீஸ், அரபியன், கிரில் என காலத்திற்கேற்ப மாற்றம்.

 


பாண்டியாஸுக்கு பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரத்தில் கிளைகள் உண்டு. ஸ்டார்டர்ஸ் எதுவும் சொல்லாமல் நேராக மட்டன் நல்லி பிரியாணி (280₹) மற்றும் சிக்கன் 65 பிரியாணி(280₹) என ஆர்டர் செய்தோம். முதலில் பெரிய வாழை இலையை வைத்தனர். இப்பெல்லாம் வாழை இலையை ஏசி ரெஸ்டாரண்ட்களில் பார்ப்பதே அரிதாகிவிட்டது.

 

மீடியம் சைஸ் பாஸ்மதி அரிசியில் தேங்காய்பால் ஊற்றி தனியா சற்று தூக்கலாக இட்டு சமைத்த சற்று குழைவாக பச்சை நிறத்தில் இருந்தன இரண்டு வகை பிரியாணிகளும். காரம் என்பது பேச்சுக்கு கூட கிடையாது. இதை மதுரையில் தேங்காய் சோறு என்பார்கள். கண்டிப்பாக மதுரைக்காரர்கள் இதை பிரியாணி என ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சற்று வித்தியாசமான சுவை. பெங்களூரில் மட்டன் புலாவ் சாப்பிட்டவர்கள் ரசித்து உண்பார்கள். உடன் நல்ல கட்டியான வெங்காய பச்சடியும் காரமற்ற சாப்ஸ் குருமாவும் வந்தன.



மட்டன் பிரியாணியில் இரண்டு சுற்றி கறியுடன் கூடிய நல்லி (மற்றும் வேக வைத்த முட்டை). என்ன பொதுவெளியில் சத்தமாக தட்டி சாப்பிடத்தான் கஷ்டமாக இருந்தது. சிக்கன் 65 பிரியாணியில் நாலு மீடியம் சைஸ் சிக்கன் 65 பீஸ்கள். நல்ல ஸாப்டான பீஸ்கள்.




கண்டிப்பாக இந்த ஸ்டையில் பிரியாணியை அடிக்கடி சாப்பிட முடியாது. கிஞ்சிற்றும் காரம் இலையெனில் நமக்கு செட் ஆகாது. ஆனால் குழந்தைகளுக்கு அருமையாக செட் ஆகும். வித்தியாசமான அதுவும் வடசென்னை ஸ்டெயிலில் உள்ள பிரியாணியை(முயல் உட்பட) சுவைக்க தரமான இடம்.

முகவரி:
Hotel Pandia's
189, Arcot Rd, Opposite Kamala Theatre, Vadapalani, Chennai

Saturday, November 2, 2019

கறி பாக்ஸ்

மதிய வேளை. செம்ம பசி. ஒரு நல்ல அசைவ சாப்பாடு கட்டனும் என்று முடிவாயிற்று. ஆனால் எங்கு செல்வதென்று குழப்பம். அஞ்சப்பர், பொன்னுசாமி எல்லாம் முன்ன மாதிரி இல்லை. குமார் மெஸ் போகலாமென்றால் பில்'லுல தாளிச்சிடுவாய்ங்க. கம்மியா செலவாகனும் ஆனால் திருப்தியா சாப்பிடனும். கூகிள் மேப்பில் நம்ம ப்ரேவெட் லிஸ்டில் உள்ள உணவகங்களை தேடிய போது கண்ணில் பட்டது "கறி பாக்ஸ்". பல நாட்களாக செல்ல நினைத்த உணவகம் இன்று தான் வாய்த்தது.


அண்ணா நகர் கோபுரம் மெட்ரோ ஸ்டேஷன் பின்புறம் உள்ள ஒன்றாவது தெருவுல் அமலா மெஸ்ஸுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது கறி பாக்ஸ். கால் மணி நேர காத்திருப்பிற்கு பிறகே நமக்கு அமர இடம் கிடைத்தது. ஸ்பெசல் அசைவ சாப்பாடு (250₹) மற்றும் இறால் 65 பிரியாணியும் (180₹) ஆர்டர் செய்தோம். இங்கு நீர் அருந்தும் குவளை முதல் சாப்பிட தட்டு வரை எல்லாமே மண் பாண்டங்களே.




கேசரி, புடளை கூட்டு, உருளை கிழங்கு வருவல், சிக்கன் 65, மட்டன் சுக்கா, சிக்கன் குழம்பு, அவித்த முட்டை, அப்பளம், ரசம், மோர் மற்றும் அளவில்லா சோறு. என்னால் எல்லாத்தையும் டிரை பண்ண முடியவில்லை. கேசரி அளவான இனிப்பு நல்ல ப்ளேவர். சிக்கன் குழம்பு செம்ம காரம். ஆனால் சரியான டேஸ்டு. சிக்கன் 65 சூடே இல்லை ஆனால் வழக்கமான சுவை. மட்டன் சுக்கா ஒவ்வொன்றும் சின்ன சின்ன பீஸ் நல்லா மசாலாவோட அல்டிமேட். ரசமும் நன்று. மோர் சாதம் சாப்பிட வயிற்றில் இடமில்லை.


சீரக சம்பாவில் செய்த பிரியாணியில் அவித்த முட்டையும் பொறித்த இறால்களும் வைத்து வெங்காய பச்சடி மற்றும் சிக்கன் குழம்புடனும் தந்தனர். 12-15 சிறு இறால்கள் 65 மசாலாவுடன் பொறிட்டது. சென்னையில் நூற்றி என்பது ரூபாயில் நல்ல ராட்டு பிரியாணி வேறு எங்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை. அதுவும் இங்கு கிடைக்கும் ஸ்பெசல் சாப்பாடு. கண்டிப்பாக நம்பி வரலாம். சொல்ல மறந்துவிட்டேன் இங்கு மதியத்திற்கு அயிரை மீன் குழம்பு கிடைக்கும்.

கூகிள் வழிகாட்டி:

Friday, October 25, 2019

நல்லி பிரியாணி at Star Biriyani

இரவு நேரம். அலுவலகத்தில் ஓர் மூலையில் அமர்ந்து மின்திரையையே விழித்து பார்த்து கொண்டிருந்தேன். திடீர் என அந்த வார்த்தை என் காதில் ஒலித்தது. அது "பிரியாணி". எல்லாருக்கும் ஒவ்வோர் breaking point இருக்கும். என்னுடைய breaking point பிரியாணி. சகாக்கள் இருவர் இரவு உணவிற்கு ஆம்பூர் ஸ்டார் பிரியாணி செல்வதென்று பேசிக்கொண்டு இருந்தனர். வீட்டிற்கு சென்று எப்பொழுதும் சாப்பிடும் தோசையை சாப்பிட வேண்டுமே என நொந்து கொண்டிருந்த எனக்கு அந்த சொல் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்த சில நிமிடங்களில் ராமாபுரம் ஸ்டார் பிரியாணி உணவகத்தில் மூவரும் வந்து அமர்ந்தோம்.


மட்டன் பிரியாணி காலி என ஆர்டர் எடுத்த பாய் பெரும் மன உளச்சலை கொடுத்தார். ஆனால் சிக்கன் பிரியாணியை உண்ண உடன் வந்த சகாக்களுக்கு விருப்பம் இல்லை. உடனே நம்ம பாய் தமிழனின் புதிய படைப்பான "நல்லி பிரியாணி" இருக்கு என கூற சற்றும் தாமதிக்காமல் ஆர்டர் செய்தோம். பன்னீர் கோலிசோடா(25₹) ஒன்றும் வரவழைக்கப்பட்டது.


பெரிய வாழை இலையில் கத்தரிக்காய் தொக்கும் வெங்காய பச்சடியும் வைத்தனர். பிறகு வந்தது நம்ம ஹீரோ. இருநூற்று என்பது ரூபாயில் மூன்று நல்லி பீஸ்களுடன் பிளேட் நிறைய சீரகசம்பா பிரியாணி. பார்த்தவுடன் டாக்டர் பட்டம் கிடைத்த மாதிரி மகிழ்ச்சி. 😁


சிக்கன் பிரியாணி சட்டியில் இருந்து எடுத்த பிரியாணி அரிசியை சிறிது மசாலா உடன் கலந்த நல்லியுடன் பரிமாறினர். கத்தரி தொக்கும் பச்சடியும் பிரியாணி சுவையை மேலும் உயர்த்தியது. நல்லியோ தாறுமாறு flavor. அதுவும் போன் மேரோவை உறிஞ்சி சாப்பிட அலாதி சுவை. என்ன மசாலாவில் காரம் தான் கொஞ்சம் அதிகம். சரி அதுக்கு தான் நமக்கு கோலிசோடா இருக்கே. உண்மையை சொல்லனும் என்றால் மட்டன் பிரியாணியை விட நல்லி சுவையில் ஒரு படி மேல்.

கூகிள் வழிகாட்டி:

Sunday, September 1, 2019

லெட்சுமி கிருஷ்ணா பால் பண்ணை


மதுரையில் அதிகாலை இரண்டு மணிக்கும் ரோஸ்மில்க் கிடைக்கும் இடம் தான் இந்த லெட்சுமி கிருஷ்ணா பால் பண்ணை. பெரியார் பேருந்து நிலையம் பக்கம் அமைந்திருக்கும் இவ்விடத்தில் ரோஸ் மில்க் தவிர பாதாம் பால், பால் கோவா என பல உண்டு. எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும்.

 


சித்தப்பா பசங்களோட ஒரு நடை போனப்ப ரோஸ் மில்க்(25₹) மற்றும் பாதாம் பால்(35₹) bottoms up. தரமான பால். நாக்கில் எச்சில் ஊர வைக்கும் சுவை. மதுரை வந்தால் கண்டிப்பாக மிஸ் செய்யக்கூடாத ஒன்று.





கூகிள் வழிகாட்டி:
 

மதுரை சங்கம் சகா



பல நாட்களாக செல்ல நினைத்த உணவகம். மதுரை கேகே நகரில் அப்போலோ மருத்துவமனை அருகில் அமைந்துள்ளது "சங்கம் சகா". இந்த முறை மதுரை வருகையால் கிடைத்த நன்மைகளில் ஒன்று.





உள்ளே சென்று அமர்ந்ததும் இனிப்பும் புளிப்புமான பானகம் ஒரு சிறிய மண் குவளையில் கொடுத்தார்கள். பல வருடங்களுக்கு முன் சிறு வயதில் அழகர் திருவிழாவில் குடித்தது. சுவையாக இருந்தது. முடிந்தால் இரண்டு ரிப்பீட் கேளுங்க, ஏன்னா திரும்ப இது எப்ப கிடைக்கும் என்று கூற இயலாது. பிறகு இந்த உணவகத்தையும் அவர்கள் தரும் பாரம்பரிய உணவுவகைகள் பற்றியும் கூறினார்கள். அதன்பிறகு நன்னாரியும் சீரகமும் சேர்த்த தண்ணீர் வைத்தனர். நல்ல வாசனையான herbal நீர்.






ஆரம்ப உணவாக அரண்மனை கோழி (135₹), கறி கோலா உருண்டை(30₹) மற்றும் கயல் கோலா உருண்டையும் (30₹) வரவழைத்தோம். அரண்மனை கோழி நல்ல மொறு மொறுவென எண்ணையில் பொறித்தது, வேர்கடலை வேறு டாப்பிங்காக போட்டிருந்தனர், கிட்டத்தட்ட kfc டேஸ்ட், அட்டகாசம். என்ன இரண்டே பீஸ்தான். இரண்டு ரிப்பீட் சொல்ல வேண்டியதாகிவிட்டது. கறி மற்றும் கயல்(மீன்) கோலா எப்பவும் போல நன்றாக இருந்தது. பின்னர் வஞ்சிரம் வருவல் பழம்புளி சட்னியுடன்(175₹) 👌👌👌




 மெயின் உணவாக (ஓலை)பெட்டி புலால் சோறு(மட்டன்) மற்றும் மூங்கில் ஊன் சோறு(நாட்டுக்கோழி). எப்பவும் கிடைக்கும் பிரியாணி போல் இல்லாமல் கறி வறுவல் சமைத்த சட்டியில் சாதத்தை இட்டு கிளறியது போன்ற அருமையான சுவை. மட்டன் இருந்ததால் புலால் சோறு ஊன் சோற்றை விட சுவை மிகுந்ததாக இருந்தது. தொட்டுக்க தயிர் வெங்காய பச்சடி just perfect combo.




கடைசியாக இளநீர் அமிர்தம்(95₹) மற்றும் சூடான பருத்திப் பால் அல்வா(80₹). அல்வாவை வாயில் இட்டதும் கரைந்தது புது உணர்வை தந்தது என்றால் மிகையில்லை. இளநீர் அமிர்தம் மேற்புறம் புட்டிங் போன்றும் கீழே ஜெல்லி போன்றும் இருந்தது. இளநீரில் உள்ள இளம் தேங்காயை வெட்டி சிறு சிறு துண்டுகளாக மேலே இருந்தது. இங்கு வந்தால் "இளநீர் அமிர்தம்" கண்டிப்பாக மிஸ் செய்யாதீர்கள்.


கூகிள் வழிகாட்டி:

Saturday, August 24, 2019

தஞ்சாவூர் மிலிட்டரி ஓட்டல்



ஜார்ஜ் டவுனை சுற்றி சில பல வேலைகளை முடித்து விட்டு மதிய வேளையில் நல்ல பசியுடன் தஞ்சாவூர் மிலிட்டரி ஓட்டல் எனப்படும் கட்டையன் செட்டியார் ஓட்டலுக்கு நானும் நண்பரும் வந்தடைந்தோம். கந்தகோட்டம் கோயிலில் இருந்து இருநூறு மீட்டர் தொலைவில் ராசப்ப செட்டி தெருவில் அமைந்திருக்கிறது இந்த பழமையான உணவகம்.







அதிகபட்சம் ஆறு பேர் தான் உட்கார்ந்து சாப்பிட முடியும். விறகு அடுப்பு சமையல் தான். மட்டன் புலவும் கறி தோசையும் ஆர்டர் செய்தோம். முதலில் வந்தது மட்டன் புலவு(170₹). கடினமான கறி. சற்று வித்தியாசமான புலவு. நிறைய பேருக்கு பிடிக்க வாய்ப்பில்லை. அதன் மேல் ஊற்றிய குழம்பு சற்று subtleஆன சுவை. இரண்டு பேரும் ஷேர் செய்ததால் சீக்கிரம் முடித்து விட்டோம்.




அடுத்து வந்தது கறி தோசை(140₹), நாங்கள் இவ்வளவு தூரம் வந்ததுக்கு காரணமே அதுதான். நல்ல பெரிய தோசை. அதுக்கு குடுத்த க்ரேவி எங்களை 90'களுக்கு கூட்டிச் சென்றது. ஆம் அப்படி ஒரு காரமும் சுவையும் மிகுந்த க்ரைவியை சென்னையில் சாப்பிட்டு பல பல வருடங்கள் ஆகிவிட்டது. சுடச்சுட கறி தோசையை க்ரேவியில் தொட்டு சாப்பிட, ஆகா அபாரமான சுவை. சென்னையில் மிஸ் பண்ண கூடாத சுவைகளில் இந்த ஓட்டல் கறி தோசை கண்டிப்பாக இடம்பெறும்.



கூகிள் வழிகாட்டி: