Tuesday, October 30, 2018

ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை

மதுரைனாலே இனிப்பு என்றால் பிரேமா விலாஸ் அல்வா தான் வெளியூர்காரங்களுக்கு ஞாபகம் வரும். ஆனால் பல வகையான சிறு கடைகள் இங்கு இனிப்புகளுக்கு பிரசித்தம். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் புது மண்டபம் மற்றும் நந்தி சிலை அமைந்திருக்கும் கீழ் ஆவனி மூல வீதியில் உள்ள "இது தான் கியாதி பெற்ற ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை"யில் கெட்டியான கோதுமை அல்வா அவ்வளவு ருசி.



இங்கு அருகருகில் இரு கடைகள் உள்ளன. நந்தி சிலையில் இருந்து வருகையில் வலது பக்கம் வரும் (சிகப்பு பெயர்ப்பலகை வைத்திருக்கும்) முதல் கடைதான் ஒரிஜினல். கேட்பதற்கு முன்னே ஒரு தாளில் மந்தாரை இலை வைத்து சிறிது அல்வாவும் காரா சேவும் மிச்சரும் சுவைக்க கொடுத்தனர். அற்புதமான சுவை. அல்வா நாற்பத்தைந்து நாள்கள் வரை கெடாமல் இருக்கும் என்றார்கள்.



பிறகு சிறிது இனிப்பு பூந்தி, சிறு முறுக்கு மறுபடியும் காரா செவ் என என் மதிய உணவு அங்கேயே பாதி முடிந்துவிட்டது. பூந்தியை விட மற்றவை அருமை. அதிலும் காரா சேவ் உரைப்பின் உச்சம். சில பைகளில் கோதுமை அல்வாவும் (ஒரு கிலோ 400₹), காரா சேவு(ஒரு கிலோ 300₹) மற்றும் சில டிரை ஜாமுன்களும்(ஒன்று 5₹) வாங்கப்பட்டது. சென்னை வாடிக்கையாளர்களுக்கு அலைபேசியில் தெரிவிட்டால் மதுரை ராதா ட்ராவல்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்புவதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.



அங்கு காரமான உருளை கிழங்கு மசாலாவை(8₹) மந்தாரை இலையில் சுற்றி வைத்திருப்பார்கள். தயிர் சாதத்துடன் சாப்பிட சொர்க்கம்தான். அதை இரண்டு பொட்டலம் வாங்கிவிட்டு சாப்பிட்டு கொண்டே வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தேன்.
 



மதுரை வந்தால் கோவிலுக்கு போயிட்டு ஒரு நடை இந்த கடைக்கு மறக்காமல் சென்று வரவும். அப்புறம் சொல்ல மறந்திட்டேன். பக்கத்தில் தான் அசைவ உணவிற்கு பிரபலமான ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் இருக்கு. அதைப்பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.