Sunday, May 27, 2018

குஜராத்தி மண்டல்

பாரிஸ் கார்னர் என்கிற ஜார்ஜ் டவுன் சென்னையின் ஹோல்ஸேல் மார்கட். பலவகை உணவுகளுக்கும் பிரசித்தம், அதுவும் முக்கியமாக வட இந்திய சைவ உணவுகள். இன்று நண்பனுக்கு சில டூல்ஸ் வாங்க பிராட்வே செல்ல நேரிட்டது. உடனே மதிய உணவு குஜராத்தி மண்டலில் என முடிவாகிவிட்டது.


என்.எஸ்.சி போஸ் ரோட்டிலிருந்து பிராட்வேயில் நுழைந்தால் நூறு அடி தாண்டிய பிறகு வலதுபுறம் குணவந்தி பவன் என்னும் கட்டிடத்தில் அமைந்துள்ளது ஶ்ரீ குஜராத்தி மண்டல் என்னும் உணவகம். மிகமிக எளிய உணவகம். சேரில் உட்காரவே போதும் போதுமென்று ஆகிவிட்டது. ஒரு பெரிய தட்டில் குஜராத்தி தாளி எனப்படும் மீல்ஸ் (ஒரு ப்ளேட் 120₹) வைத்தனர். அதில் உருளை மசாலா, காய்கறி மசாலா, கட்டி தயிர், பப்பட், கத்தரி சேனை கூட்டு என பல. தமிழில் தான் எத்தனை சொற்கள் அவியல், கூட்டு, பொறியல், வருவல், உசிலி என. ஆனால் இங்கே எல்லாமே சப்ஜி தான்.





டேபிளில் நான்கு குவளைகளில் கோஸ் வெள்ளரி சேலட், பொரித்த பச்சை மிளகாய், புதினா சட்னி மற்றும் மாங்காய் ஊருகாய். இதன் பிறகு இரண்டு ரொட்டி, தோக்ளா மற்றும் புடலை அல்வா வைத்தனர். தோக்ளாவும் புடலை அல்வாவும் இனிப்புகள். அதுவும் அந்த அல்வா பச்சை கலரில் பார்க்கவே வித்தியாசமாக மிகுந்த தித்திப்பாகவும் இருந்தது. அதிக இனிப்பினால் ஒரு லெவலுக்கு மேல சாப்பிட முடியவில்லை. ரொட்டி மிருதுவாக அதுவும் கத்தரி கூட்டுடன் அருமையோ அருமை. மனசாட்சியே இல்லாமல் ரொட்டியை வைத்துகொண்டே இருந்தார்கள். நண்பனுக்கு எப்படி சொல்லி இதை நிறுத்தறதுனே தெரியலை. அப்புறம் எனக்கு தெரிஞ்ச ஹிந்தில "பஸ் பய்யா, சாவல் சாஹி"யேனு சொல்லி சாப்பாடு கேட்டேன்.




சாதத்திற்கு சாம்பார், ரசம் மற்றும் கெட்டி தயிர். சாம்பாரை உண்மையில் பருப்பு என்றே கூறவேண்டும். ஆனால் நன்றாகவே இருந்தது. ரசம் எதிர்பார்க்காத ஒன்று. செம சூடாக இருந்தது. கூட அந்த சுருண்ட பப்பட் மொறுமொறுவென அம்சம். கடைசியில் தயிரை அப்படியே சாப்பிட வேண்டியதாகிவிட்டது.




 அப்படியே எழுந்திரிக்கலாமென பார்த்தால் கூட வந்த பயபுள்ள பாசுந்தியும் ஆம்ராஸ் என்ற மாம்பழரசமும் (ஒன்று 30₹) வாங்கிட்டான். பாசுந்தியை விட ஆம்ராஸ் செம திக்காக தெய்வீக லெவல். இங்கு சப்ஜி, ரோட்டி மற்றும் சாதம் மட்டும் அன்லிமிடட். ஏசி கிடையாது. வெயில் காலங்களில் கொஞ்சம் சிரமம். ஆனால் வட இந்திய சைவ உணவு விரும்பிகளுக்கு அருமையான விருந்து. குஜராத்தி ஸ்னாக்ஸ் மற்றும் ஸ்வீட்ஸும் இங்கு அமைந்திருக்கும் கடையில் கிடைக்கும்.



கூகிள் வரைபடம்:


Saturday, May 26, 2018

பாம்பே லஸ்ஸி


 அண்ணா சாலையில் இருந்து எல்லிஸ் ரோட்டில் நுழைந்து மசூதிக்கு பக்கத்து தெருவில் நுழைந்து கடைசியில் இடது திரும்பினால் தேவி தியேட்டர் பின் கேட்டின் எதிரில் இக்கடை முப்பது வருடங்களுக்கு மேல் அமைந்துள்ளது. தொன்னூருகளில் தேவியில் டிக்கட் எடுத்துட்டு படம் பார்ப்பதற்கு முன் இங்க வந்து சமோசா சாப்பிடுபவர் அனேகம் நான் உட்பட. ஆனால் இப்போது வியாபார காரணங்களால் தியேட்டர் பின் கதவு சாத்தப்பட்டுவிட்டது.





ரிட்ச்சி தெருவில் சில எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கிய பின் நேராக பாம்பே லஸ்ஸி கடைக்கு வண்டியை திருப்பினோம். தெருவில் தான் நின்று சாப்பிட வேண்டும். காரில் எல்லாம் இங்க வர நினைத்துகூட பார்க்காதீர்கள், அனைத்தும் குறுகிய தெருக்கள்.




முதலில் ஆளுக்கு ஒரு சமோசா (12₹) வாங்கினோம். சுடச்சுட உருளை சமோசா மந்தாரை இலையில் புதினா மற்றும் புளி சட்னியுடன் தந்தார்கள். முன்ன மாதிரி இல்லை, ஆனாலும் சுவையில் பிரமாதம். அதிலும் அந்த இரண்டு சட்னியும் வேற லெவல்.


கடைசியில் ஸ்பெசல் லஸ்ஸி (50₹) வந்தது. பாசுந்தியுடன் நல்ல கெட்டி
தயிரும் சர்க்கரையும் மிக்ஸ் செய்து ஒரு ஸ்பூன் தயிர் டாப்பிங்குடன் சர்க்கரை தூவி சாப்பிட வயிரும் மனதும் நிறைந்தது. வீட்டிற்கு கால் கிலோ பாசுந்தி்(100₹) வாங்கிய பின் விடை பெற்றோம்.

கூகிள் வரைபடம்:
 

Monday, May 14, 2018

அப்ஸோலூட் பார்பிகூ

அலுவலக நண்பர் ஒருவரின் பிரிவு உபசார உணவருந்தலுக்காக போரூரில் அமைந்திருக்கும் "அப்ஸோலூட் பார்பிகூ" நேற்று செல்ல நேரிட்டது. இரு நாட்களுக்கு முன்பாகவே டேபிள் ரிசர்வ் செய்து விட்டோம். இல்லாவிட்டால் நமக்கு இடம் கிடைப்பது சிரமம், முக்கியமாக வார இறுதி நாட்களில். இந்த இடம் சைவ மற்றும் அசைவ விரும்பிகளின் சொர்க்கம் என்றே கூறலாம். அத்தனை வகை உணவுகள்.




அமர்ந்த உடனே ஒரு லைவ் கிரில்லை டேபிளில் வைத்தனர். அது அபெடைசர் எனப்படும் ஆரம்ப உணவுகளுக்கு மட்டுமே. நாங்கள் வந்ததும் அதற்காகவே. சிக்கன், இறால், மீன், பைன் ஆப்பிள், பன்னீர், காளான், தர்பூசனி போன்றவை இரும்பு குச்சிகளில் சொருகப்பட்டு கிரில்லில் சாப்பிட சாப்பிட வைத்துக்கொண்டே இருந்தனர். இது தவிர மட்டன் சீக், அஜ்மீரி வெஜ் கபாப் ஆகியன தனியாக சமைக்கப்பட்டு பிளேட்டில் வைத்தனர். தொட்டுக்கொள்ள பல வகை சாஸ் வேறு.





தனியாக ஒரு பெரிய கிரில் வேறு இடத்தில் இருந்தது. அரிய வகை அசைவ உணவுகளான முயல், பார்பிகூ சிக்கன், ஈமு, சுறா, காடை, வாத்து கறி என பல. நாம் எதை கேட்குறோமோ அதை கேட்கின்ற சாஸில் வெங்காயம் மற்றும் பிற சேர்த்து வறுத்து கொடுக்கின்றனர்.





அதன்பிறகு மெயின் டிஷ்'இல் இறங்கினோம். சைவம் மற்றும் அசைவ உணவுகள் தனிதனியாக வைக்கப்பட்டிருந்தது. அசைவத்தில் சிக்கன், பிரியாணி, சிக்கன் பிரைட் ரைஸ், அஜ்மீர் சிக்கன் கிரேவி, நிஹாரி மட்டன், மலபார் ஷிரிம்ப், அஜ்வைனி மீன் ஆகியன மற்றும் சைவத்தில் வெஜ் பிரியாணி, வெஜ் நூடுல்ஸ், அப்பளம், பப்பட், நான், குல்ச்சா, சாதம், ரசம், தயிர் சாதம். இன்னும் நிறைய இருந்தன, நியாபகம் வைத்துக்கொள்ள மூடியவில்லை. அத்தனையும் தாறுமாறு லெவல்.


கடைசியா இனிப்புகள் என குலாப் ஜாமுன், பாஸ்ட்ரி, சாக்லேட் டிளைட் மற்றும் ரச மலாய் கொஞ்சம் கொஞ்சமாக என் பிளேட்டில் இருந்து மறைந்தன். கடைசியாக குளிர் கல்லில் செய்யபட்ட பான் ஐஸ்கிரிம் ஒரு ஸ்கூப். பான் சிறிது தூக்கலாகி விட்டது, இல்லையெனில் அருமையாக இருந்திருக்கும்.



இதற்கு மேல் நான் நிறுத்திக் கொள்கிறேன். என் படங்கள் பேசும் இனி.
















பில் கட்டாம போனா எப்படி. பத்து பேரில் ஒருவருக்கு ப்ரீ. பதிநான்கு அசைவ மற்றும் இரண்டு சைவ நண்பர்களுக்கு மொத்த பில் 10,613₹.


கூகிலாண்டவர் வழிகாட்டி: https://goo.gl/maps/CW9RceTcJK12