Thursday, December 20, 2018

மதுரை பாண்டியன் ஹோட்டல்


அலுவலகத்தில் இரவு நேரம். என் பின்னாடி உட்கார்ந்திருந்த மக்கள் புதிதாக திறக்கப்பட்ட "மதுரை பாண்டியன் ஹோட்டல்" செல்வதாக பேசிக்கொண்டிருந்தனர். இந்த உணவகத்தை பற்றி பல முறை நண்பர்கள் கூற கேள்விப்பட்டதுண்டு. சிறுது நேரத்தில் அக்குழுவில் நானும் இன்னும் பிறரும் சேர்ந்து செம பசியோடு இரவு உணவருந்த கிளம்பினோம்.



ராமாபுரம் டி.எல்.எப் எதிரில் அமைந்திருக்கிறது பாண்டியன் ஹோட்டல். முதலில் ஆளுக்கோரு பன் பரோட்டா (ஒன்று 30₹) வந்தது. சைவ மற்றும் அசைவ சால்னா இரு சட்டிகளில் டேபிளில் வைத்தார் உணவு பரிமாறுபவர்.
பன் பரோட்டா சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நடுப்பகுதி சரியாக வேகவில்லை. மதுரையில் பன் பரோட்டா சாப்பிட்டவர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும்.




அடுத்து மட்டன் பிரியாணி(200₹) மற்றும் மட்டன் ஈரல் வறுவல்(180₹). வழக்கம் போல வெங்காயம பச்சடியும் கூடவே வந்தது. சீரக சம்பா பிரியாணி அட்டகாசம். மட்டன் பீஸ் ஒவ்வொன்றும் செம பிரஷ் அண்டு ஸாப்ட். இதுல நல்லி பீஸ் வேற நமக்கு வந்துச்சு. ஈரலோ வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை கலந்து ஃப்ரை செய்து அருமையாக இருந்தது. அடுத்த முறை வந்தால் இவ்விரண்டையும் ஆர்டர் செய்ய இப்பவே முடிவு செஞ்சாச்சு.
கடைசியாக ஒரு முட்டை லாபா(90₹). நல்ல கிரிஸ்பியாக வெங்காயம் கலந்த முட்டையை அடிச்சு ஸ்டப் செய்து சமைத்திருந்தனர். இது சைவ குருமாவோடவே அருமையாக இருந்தது. காரமான அசைவ சால்னா கூட எப்படி இருக்குமென நினைத்துப்பாருங்கள்.




கடைசியாக ரசம் ஒரு கப் வாங்கி இறக்கியாச்சு. இதுல வசதி என்னான்னு இங்கு சூப் வாங்க வேண்டிய தேவையே இல்லை. இலவசமாக கிடைக்கும் சூடான ரசமே காரமா அருமையா இருந்தது.

மொத்தத்தில் பன் பரோட்டாவை தவிர அனைத்துமே செம டேஸ்ட். சாப்பாடு கூட நல்லா இருக்குமென்று நண்பர் கூறினார். ஒரே பிரச்சினை என்னவென்றால் கூட்டம் அதிகமாக வருவதால் டேபிள் கிடைக்க வெயிட் பண்ணனும்.

Thursday, December 13, 2018

கேழ்வரகு மற்றும் அரிசி புட்டு

சிறு வயதில் நமக்கு கிடைத்த அரிய திண்பண்டங்களை இப்போது பார்த்தால் எப்படி இருக்கும். இன்று காலை காமராஜர் சாலையில் செல்லும் போது அரசமரம் பிள்ளையார் கோவில் எதிரில் உட்கார்ந்திருந்த பெரியவர் எதோ ஒன்றை விற்பனை செய்ததையும் சுற்றிலும் சிலர் அதை வாங்கி கொண்டிருந்ததையும் பார்க்க நேரிட்டது. பக்கத்தில் சென்றால், அரிசி மற்றும் கேழ்வரகு புட்டை பெரிய டபரா சட்டியில் வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தார்.


தொண்ணூருகளின் ஆரம்ப காலங்களில் பாண்டிய வேளாளர் தெரு சந்தையில் ஒருவர் தினமும் காலையில் இவ்விறு வகை புட்டுகளையும் விற்பார், அதை 25 பைசா கொடுத்து வாங்கி சாப்பிட்ட ஞாபகம். இப்போதெல்லாம் அவர் சந்தைக்கு வருவதில்லை. சென்னையில் எங்கும் இவ்வகை பண்டங்களை பார்த்தது இல்லை.




உதிர்ந்த கேழ்வரகு மற்றும் அரிசி புட்டுகளை தேங்காய் துருவல் சேர்த்து சில பாக்கெட்டுகள் (ஒன்று 10₹) வாங்கிய பின் வண்டியை வீட்டிற்கு திருப்பினேன். இரண்டுமே சுவை மிகுந்தவை, அதிலும் அரிசி புட்டு 👌👌👌

முக்கியமான விஷயம், காலையில்(6 - 8 மணி) மட்டுமே இது கிடைக்கும்.


Saturday, December 8, 2018

கூரை கடை பன் புரோட்டா

பரோட்டா கேள்விப்பட்டு இருப்பீர்கள். பன் புரோட்டா சுவைத்ததுண்டா. போன வாரம் தான் மதுரையில் அதை சுவைக்க நேரிட்டது.


ஓர் இரவு என் மச்சானுடன் பன் புரோட்டா கடையை நோக்கி ஒரு பயணம். அண்ணா நகர் ஆவின் பாலகம் அருகாமையில் உள்ள புகழ்பெற்ற பன் புரோட்டா கடை தான் செல்வதாக நினைத்தேன். ஆனால் மச்சானோ அது ரோட்டோரக் கடை அதனால் வேறு கடை செல்வோமென சொல்ல, வண்டியை ஆவின் சிக்னலில் இடது பக்க வாட்டில் சிவகங்கை ரோட்டில் திருப்பினேன்.




சிறிது தூரம் சென்றதும் (கோனார் மெஸ் தாண்டியதும்) வலது பக்கத்தில் ஒரு கூரை வேய்ந்த கடையை சுற்றி ஒரு கும்பல் நின்று கொண்டு இருந்தது. கடைக்கு பேர் கிடையாது. அதனால் மக்கள் கூரை கடை என்றுதான் அழைப்பார்கள்.





இருவரும் உள் நுழைந்து சாப்பிட இடத்தை பிடித்தோம். மிகச்சிறிய உணவகம். குடும்பதோடு செல்ல உகந்தது அல்ல. அதனால் தானோ என்னவோ பார்சலுக்கு நிறைய பேர் வந்திருந்தனர். இலை வைத்த பிறகு, ஆளுக்கு ரெண்டு புரோட்டாவும்(ஒன்று 15₹) பிறகு ஒரு மட்டன் சுக்காவும்(90₹), வழியல் (similar to scrambled egg..சென்னையில் கலக்கி என்றழைக்கப்படும்) மற்றும் ஆம்லெட் சொன்னோம்.





பன் புரோட்டா தாருமாறு டேஸ்ட். மேல் பகுதி மொறு மொறுப்பாகவும் உட்பகுதி மென்மையாகவும் மிக மிக அருமை. இங்கு விசேஷம் என்னவென்றால் புரோட்டாவிற்கு கொடுக்கப்படும் பல வகையான க்ரேவீஸ். பாயா, ஈரல் குழம்பு, எழும்பு குழம்பு மற்றும் குடல் குழம்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஈரல் குழம்பு தான் சிறிது உரைப்பு அதிகம்.
மட்டன் சுக்காவில் வெங்காயம் தான் அதிகம், ஆனால் சுவையில் எந்த குறையுமில்லை.





அது என்ன மாயமோ தெரியலை, மதுரையில் மட்டும் புரோட்டாவிற்கும் கூட கொடுக்கற சால்னாவிற்கும் அப்படி ஒரு சுவை. சென்னையில் அப்படி ஒரு சுவையான பரோட்டாவை பார்த்தும் இல்லை சுவைத்தும் இல்லை. எப்படியோ திரும்ப சென்னை வந்தாச்சு. அடுத்த முறை மதுரை போனால் விளக்குதூண் அசோக் புரோட்டா கடை தான் ப்ளான். அதை பற்றி அடுத்த ட்ரிப்பிற்கு பின் எழுதுகிறேன்

Tuesday, October 30, 2018

ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை

மதுரைனாலே இனிப்பு என்றால் பிரேமா விலாஸ் அல்வா தான் வெளியூர்காரங்களுக்கு ஞாபகம் வரும். ஆனால் பல வகையான சிறு கடைகள் இங்கு இனிப்புகளுக்கு பிரசித்தம். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் புது மண்டபம் மற்றும் நந்தி சிலை அமைந்திருக்கும் கீழ் ஆவனி மூல வீதியில் உள்ள "இது தான் கியாதி பெற்ற ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை"யில் கெட்டியான கோதுமை அல்வா அவ்வளவு ருசி.



இங்கு அருகருகில் இரு கடைகள் உள்ளன. நந்தி சிலையில் இருந்து வருகையில் வலது பக்கம் வரும் (சிகப்பு பெயர்ப்பலகை வைத்திருக்கும்) முதல் கடைதான் ஒரிஜினல். கேட்பதற்கு முன்னே ஒரு தாளில் மந்தாரை இலை வைத்து சிறிது அல்வாவும் காரா சேவும் மிச்சரும் சுவைக்க கொடுத்தனர். அற்புதமான சுவை. அல்வா நாற்பத்தைந்து நாள்கள் வரை கெடாமல் இருக்கும் என்றார்கள்.



பிறகு சிறிது இனிப்பு பூந்தி, சிறு முறுக்கு மறுபடியும் காரா செவ் என என் மதிய உணவு அங்கேயே பாதி முடிந்துவிட்டது. பூந்தியை விட மற்றவை அருமை. அதிலும் காரா சேவ் உரைப்பின் உச்சம். சில பைகளில் கோதுமை அல்வாவும் (ஒரு கிலோ 400₹), காரா சேவு(ஒரு கிலோ 300₹) மற்றும் சில டிரை ஜாமுன்களும்(ஒன்று 5₹) வாங்கப்பட்டது. சென்னை வாடிக்கையாளர்களுக்கு அலைபேசியில் தெரிவிட்டால் மதுரை ராதா ட்ராவல்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்புவதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.



அங்கு காரமான உருளை கிழங்கு மசாலாவை(8₹) மந்தாரை இலையில் சுற்றி வைத்திருப்பார்கள். தயிர் சாதத்துடன் சாப்பிட சொர்க்கம்தான். அதை இரண்டு பொட்டலம் வாங்கிவிட்டு சாப்பிட்டு கொண்டே வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தேன்.
 



மதுரை வந்தால் கோவிலுக்கு போயிட்டு ஒரு நடை இந்த கடைக்கு மறக்காமல் சென்று வரவும். அப்புறம் சொல்ல மறந்திட்டேன். பக்கத்தில் தான் அசைவ உணவிற்கு பிரபலமான ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் இருக்கு. அதைப்பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.



Thursday, September 27, 2018

செல்வி அம்மாள் உணவகம்

மதிய உணவிற்கு ராமாபுரம் அரசமரம் பக்கத்தில் உள்ள செல்வி அம்மாள் பாரம்பரிய உணவகத்திற்கு செல்ல நேரிட்டது. அரச மரம் ஜங்சனில் இருந்து நெசப்பாக்கம் எம்ஜிஆர் சிலை செல்லும் சாலையில் வலதுபுரம் அய்பாகோ ஐஸ்கிரீம் கடையை ஒட்டிய சந்தில் அமைந்துள்ளது இவ்வுணவகம்.




இவ்விடம் பெண்கள் மட்டுமே சமையல். மறைவாக இல்லாமல் சமையலறை பார்வையில் படும்படி அமைத்திருந்தனர். உள் நுழையும் போதே ஒருவர் பறப்பன முதல் நடப்பன வரை வறுவல் சுக்கா என கிண்ணங்களில் வைத்திருந்தார். நான் பார்த்தவரை மீன் வறுவல், சிக்கன், நாட்டுக் கோழி, மட்டன் மற்றும் கடம்பா சுக்கா ஆகியன இருந்தன. அவரிடம் சென்று டோக்கன் வாங்கி கொண்டு, சாப்பாடும்(70₹) சிக்கன் சுக்காவும் (50₹) வாங்கிய பின் சாப்பிட உட்கார்ந்தேன். இறால் தொக்கு வாங்கலாமென நினைத்திருந்தேன், ஆனால் இன்று கிட்டவில்லை.




சாப்பாடு முறுங்கை காய் சாம்பார், ரசம், மோர், கோசு கூட்டு, கோவைக்காய் பொறியல் மற்றும் அளவான சோறுடன். முதலில் சாம்பார் மற்றும் காய்கறியுடன் சில வில்லைகள். அபாரமான சாம்பார், ஆனால் காய்கறிகள் பரவாயில்லை. பிறகு சிக்கன் சுக்கா குழம்புடன் சில வில்லைகள். சிக்கன் சிறிது காரத்துடன, அபாரம் என்று கூற முடியாது...ஆனால் வீட்டில் சமைத்ததை போன்று எண்ணை அதிகமில்லாமல் அதிக துண்டுகளுடன் நன்றாகவே இருந்தது. பின்னர் ரசம் மற்றும் மோருடன் உண்டு முடித்தேன். ரசத்தை விட மோர் சுவையாக இருந்தது.




உணவகத்தில் இருந்து வெளிய வந்தால், வாசலில் சிறு கடை அமைத்து லஸ்ஸி மற்றும் தாமரை, சோற்று கற்றாலை, நெல்லிக்காய் அல்லது எலுமிச்சை சாறு கலந்த கரும்புச்சாறு விற்றுக் கொண்டிருந்தனர். எலுமிச்சை மற்றும் இஞ்சி கலந்த கரும்புச்சாறு (20₹) வாங்கி வயிற்றில் மிச்சம் இருந்த இடத்தை நிறப்பிவிட்டு கிளம்பினேன்.



குடும்பத்துடன் செல்ல சிறந்த இடம் அல்ல. ஆனால் வயிற்றிற்கும் பர்ஸிற்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வீட்டு சாப்பாடு சாப்பிட சிறந்த கடை என்பதை மறுக்க இயலாது.




கூகிளாண்டவர்:


Monday, August 27, 2018

வவுனியா சுத்தானந்த விலாஸ்



இன்று காலை வவுனியா வந்தடைந்தவுடன் புகையிரத நிலையத்திலிருந்து பொடிநடையாக சுத்தானந்த விலாஸ் வந்தடைந்தோம். எனக்கு தோசையும் நண்பருக்கு இட்லியும் கூடவே உளுந்து வடையும் வரவழைத்தோம். தொட்டுக்கொள்ள புசனி சிறுபருப்பு சாம்பாரும் காரமான மிளகாய் மற்றும் தேங்காய் துவையல்.





தோசை பார்க்க தடிமனாக இருந்தாலும் சாப்பிட மிருதுவாக இருந்தது. இட்லி மோசமில்லை. ஆனால் வடை மிகமிக கடினம். கடைசியாக இருவருக்கும் பால் சேர்த்த தேனீர் வந்தது. இரண்டு பேர் குடிக்கலாம் என்று அளவில் இருந்தது. மொத்த பில் 280LKR. நம் இந்திய மதிப்பில் சுமார் 127 ரூவாய்.





ஒவ்வோரு டேபிளுக்கு கீழும் ஒரு தொட்டி வைத்திருந்தனர். சாப்பிட்டவுடன் தட்டில் இருந்த பிளாஸ்டிக் கவரை அதில் போட வேண்டும். சுவரில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு தாள்கள் tanglish பேசும் சென்னைவாசிகலான எங்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தன என்றால் மிகையாகாது.