Thursday, December 20, 2018
மதுரை பாண்டியன் ஹோட்டல்
அலுவலகத்தில் இரவு நேரம். என் பின்னாடி உட்கார்ந்திருந்த மக்கள் புதிதாக திறக்கப்பட்ட "மதுரை பாண்டியன் ஹோட்டல்" செல்வதாக பேசிக்கொண்டிருந்தனர். இந்த உணவகத்தை பற்றி பல முறை நண்பர்கள் கூற கேள்விப்பட்டதுண்டு. சிறுது நேரத்தில் அக்குழுவில் நானும் இன்னும் பிறரும் சேர்ந்து செம பசியோடு இரவு உணவருந்த கிளம்பினோம்.
ராமாபுரம் டி.எல்.எப் எதிரில் அமைந்திருக்கிறது பாண்டியன் ஹோட்டல். முதலில் ஆளுக்கோரு பன் பரோட்டா (ஒன்று 30₹) வந்தது. சைவ மற்றும் அசைவ சால்னா இரு சட்டிகளில் டேபிளில் வைத்தார் உணவு பரிமாறுபவர்.
பன் பரோட்டா சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நடுப்பகுதி சரியாக வேகவில்லை. மதுரையில் பன் பரோட்டா சாப்பிட்டவர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும்.
அடுத்து மட்டன் பிரியாணி(200₹) மற்றும் மட்டன் ஈரல் வறுவல்(180₹). வழக்கம் போல வெங்காயம பச்சடியும் கூடவே வந்தது. சீரக சம்பா பிரியாணி அட்டகாசம். மட்டன் பீஸ் ஒவ்வொன்றும் செம பிரஷ் அண்டு ஸாப்ட். இதுல நல்லி பீஸ் வேற நமக்கு வந்துச்சு. ஈரலோ வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை கலந்து ஃப்ரை செய்து அருமையாக இருந்தது. அடுத்த முறை வந்தால் இவ்விரண்டையும் ஆர்டர் செய்ய இப்பவே முடிவு செஞ்சாச்சு.
கடைசியாக ஒரு முட்டை லாபா(90₹). நல்ல கிரிஸ்பியாக வெங்காயம் கலந்த முட்டையை அடிச்சு ஸ்டப் செய்து சமைத்திருந்தனர். இது சைவ குருமாவோடவே அருமையாக இருந்தது. காரமான அசைவ சால்னா கூட எப்படி இருக்குமென நினைத்துப்பாருங்கள்.
கடைசியாக ரசம் ஒரு கப் வாங்கி இறக்கியாச்சு. இதுல வசதி என்னான்னு இங்கு சூப் வாங்க வேண்டிய தேவையே இல்லை. இலவசமாக கிடைக்கும் சூடான ரசமே காரமா அருமையா இருந்தது.
மொத்தத்தில் பன் பரோட்டாவை தவிர அனைத்துமே செம டேஸ்ட். சாப்பாடு கூட நல்லா இருக்குமென்று நண்பர் கூறினார். ஒரே பிரச்சினை என்னவென்றால் கூட்டம் அதிகமாக வருவதால் டேபிள் கிடைக்க வெயிட் பண்ணனும்.
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment