ஓர் இரவு என் மச்சானுடன் பன் புரோட்டா கடையை நோக்கி ஒரு பயணம். அண்ணா நகர் ஆவின் பாலகம் அருகாமையில் உள்ள புகழ்பெற்ற பன் புரோட்டா கடை தான் செல்வதாக நினைத்தேன். ஆனால் மச்சானோ அது ரோட்டோரக் கடை அதனால் வேறு கடை செல்வோமென சொல்ல, வண்டியை ஆவின் சிக்னலில் இடது பக்க வாட்டில் சிவகங்கை ரோட்டில் திருப்பினேன்.
சிறிது தூரம் சென்றதும் (கோனார் மெஸ் தாண்டியதும்) வலது பக்கத்தில் ஒரு கூரை வேய்ந்த கடையை சுற்றி ஒரு கும்பல் நின்று கொண்டு இருந்தது. கடைக்கு பேர் கிடையாது. அதனால் மக்கள் கூரை கடை என்றுதான் அழைப்பார்கள்.
இருவரும் உள் நுழைந்து சாப்பிட இடத்தை பிடித்தோம். மிகச்சிறிய உணவகம். குடும்பதோடு செல்ல உகந்தது அல்ல. அதனால் தானோ என்னவோ பார்சலுக்கு நிறைய பேர் வந்திருந்தனர். இலை வைத்த பிறகு, ஆளுக்கு ரெண்டு புரோட்டாவும்(ஒன்று 15₹) பிறகு ஒரு மட்டன் சுக்காவும்(90₹), வழியல் (similar to scrambled egg..சென்னையில் கலக்கி என்றழைக்கப்படும்) மற்றும் ஆம்லெட் சொன்னோம்.
பன் புரோட்டா தாருமாறு டேஸ்ட். மேல் பகுதி மொறு மொறுப்பாகவும் உட்பகுதி மென்மையாகவும் மிக மிக அருமை. இங்கு விசேஷம் என்னவென்றால் புரோட்டாவிற்கு கொடுக்கப்படும் பல வகையான க்ரேவீஸ். பாயா, ஈரல் குழம்பு, எழும்பு குழம்பு மற்றும் குடல் குழம்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஈரல் குழம்பு தான் சிறிது உரைப்பு அதிகம்.
மட்டன் சுக்காவில் வெங்காயம் தான் அதிகம், ஆனால் சுவையில் எந்த குறையுமில்லை.
அது என்ன மாயமோ தெரியலை, மதுரையில் மட்டும் புரோட்டாவிற்கும் கூட கொடுக்கற சால்னாவிற்கும் அப்படி ஒரு சுவை. சென்னையில் அப்படி ஒரு சுவையான பரோட்டாவை பார்த்தும் இல்லை சுவைத்தும் இல்லை. எப்படியோ திரும்ப சென்னை வந்தாச்சு. அடுத்த முறை மதுரை போனால் விளக்குதூண் அசோக் புரோட்டா கடை தான் ப்ளான். அதை பற்றி அடுத்த ட்ரிப்பிற்கு பின் எழுதுகிறேன்











No comments:
Post a Comment