Saturday, May 11, 2019

ஹோட்டல் ஜானகிராம்

மதுரையில் உள்ள மெஸ்கள் அசைவ உணவுகளுக்கு மிக பிரபலம். முக்கியமாக அம்மா மெஸ், குமார் மெஸ், சந்திரன் மெஸ் என்று உள்ளூர்வாசிகளை விட வெளியூரில் இருந்து வருபவர்கள் மத்தியில் நல்ல பரிச்சயம். அதனால் தானோ என்னவோ இங்கெல்லாம் விலை கொஞ்சம் அதிகம்.

இந்த முறை ஊருக்கு வந்தபோது மெஸ்ஸுக்கு பதிலாக என் மச்சானின் பரிந்துரையின் பேரில் தமிழ் சங்கம் சாலையில் உள்ள ஹோட்டல் ஜானகிராம் சென்றேன். கூட்டம் மிகுந்த சாலை என்பதால் காரில் செல்வதை விட பைக்கில் செல்வதே உகந்தது.



வெயில் அதிகமாக இருந்ததால் மாடியில் உள்ள குளிரூட்டப்பட்ட பகுதியில் சென்று அமர்ந்தோம். நமக்கு மட்டன் பிரியாணியும் மச்சானுக்கு மட்டன் சாப்பாடும் கொண்டுவர சொன்னோம்.



இங்கு சைவம் மட்டும் சாப்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆக முடியாது, ஏனெனில் இங்கு சைவம் கிடையாது. அதாவது சாப்பாடு கூட நெய் மீன்/அயிர மீன் கொழம்பு, மட்டன்/சிக்கன் சுக்கா என்று ஏதாவது வாங்க வேண்டும். இருவருக்கும் வாழை இழை விரித்து வெங்காய பச்சடி வைத்தனர் முதலில்.




பின்னர் மச்சானுக்கு ஒரு குவழையில் மட்டன் கொழம்பு வந்தது. பின்னர் பட்டாணி சுண்டலும் வெண்டைக்காய் பச்சடியும் வந்தது. சர்வர் அதை நமக்கு வைக்க முயற்சிக்க, தம்பி நான் சுத்த அசைவம் என்று பயத்தில் கத்த வேண்டியதாகிவிட்டது.




சாப்பாட்டிற்கு சிக்கன், மட்டன், மீன் கொழம்பு என பல வெரைட்டிகள். அப்புறம் ரசமும் மோரும் கிடைத்தது. பிறகு சுடச்சுட சீரகசம்பா அரிசியில் செய்த மட்டன் பிரியாணி வந்தது. மட்டன் பிரியாணியில் முட்டை தேவையா என்ற கேள்விக்கு பட்டிமன்றமே வைக்கலாம். ஏன்தான் முட்டை வைத்தார்கள் என்று தெரியவில்லை, அதற்கு பதில் இரண்டு பீஸை வச்சிருக்கலாம். சரி விடுடா சூணா பாணானு ஒரு ஐந்து நிமிட இடைவெளியில் இழையில் ஒரு பருக்கை அரிசி இருந்த தடயம் கூட தெரியாமல் ஆக்கப்பட்டது. சும்மா சொல்லக்கூடாது மதுரையில் மட்டும் எப்படிதான் இப்படி சுவை வருமோ. பிரியாணி சாப்பிட்ட பிறகு சாதமும் (ரசம் மற்றும் தயிருடன்) பறிமாறப்படும். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.



திடீரென்று பின்னாடி இருந்தவர்கள் நெய் மீன் சொல்ல, நாடி நரம்புகள் முறுக்கேறி நாமும் நெய் மீன் வறுவல்(150₹) ஒன்று வரவழைத்தோம். அடுப்பில் இருந்து நேராக நம்ம கிட்ட வந்துடுச்சு போல freshness at the best.
பிரியாணி விலை இருநூறு. பார்ஸல் வாங்குன போது 170₹ தான். மட்டன் சாப்பாடு 240₹. விலை அதிகமென்று நினைத்தால் குளிரூட்டப்படாத தரை தளத்தில் உணவருந்தலாம். அங்கு விலை கொஞ்சம் மலிவு. ஹோட்டலை விட்டு வெளிவந்தால் எதிரில் அமைந்திருக்கும் இளநீர் சர்பத் கடையில் ஒரு கட்டு கட்டிட்டு வீட்டிற்கு போகலாம் இல்லை இங்கேயே ஜிகர்தண்டா அருந்தலாம்.


மதுரைக்கு வந்தால் over hype உள்ள மெஸ்களை புறம் தள்ளி தைரியமாக ஜானகிராம் வந்து உணவருந்தலாம்.

கூகிலாண்டவர் வழிகாட்டி:

Saturday, April 20, 2019

ப்ளேட்

மதுரையில் நேரங்காலம் இல்லாமல் வடையும் பஜ்ஜியும் எங்க பார்த்தாலும் கிடைக்கும். மதியம் ஒரு மணிக்கு கூட KPSலயும் மீனாட்சி பவனிலும் சபரீஸ்லயும் நிறைய மக்கள் உளுந்து வடையும் காபியும் சாப்பிடறத வெளியூரிலிருந்து வரும் மக்கள் ஆச்சரியமாக பார்ப்பாங்க.


வடைகளில் உளுந்து வடை, கீரை வடை, ஆமை வடை, தவல வடை, வெள்ளையப்பம் என பல பல வெரைட்டீஸ் இங்குண்டு. அதிலும் காலையில் அப்பம் என்று ஒரு இனிப்பு ஐட்டம் கிடைக்கும். செம்ம ஊர்ங்க இது 😋. எத்தனை பீட்ஸா பாஸ்டா கடைகள் வந்தாலும் லோக்கல் உணவுகள்தான் இங்கு super star.




இன்றைக்கு சாயங்காலம் பாண்டிய வெள்ளாளர் தெருவில் (காஜிமார் தெரு முனை) மீனாட்சி காபி பாருக்கு எதிரில் அமைந்திருக்கும் ஒரு தள்ளு வண்டியில் ஒரு ப்ளேட் சாப்பிட்டோம். அட அதுக்கு பெயரே ப்ளேட் தான்.
முட்டை போண்டா மற்றும் சமோஸாவை பிச்சு போட்டு பட்டாணி கிரேவியை ஊற்றி ஒரு கலக்கு கலக்கி பாக்கு மட்டை தட்டுல போட்டு வெங்காயம் மற்றும் மசாலா பொடியை தூவி தந்தார்கள். சைவ பிரியர்களுக்கு முட்டை போண்டா இல்லாமலும் தருவார்கள். சாயங்கால பசிக்கு நல்லதொரு ஸ்னாக்ஸ். விலை வெறும் இருபத்தியேழு ரூபாய்.



இது தவிர இனிப்பு அப்பம், மிளகாய் பஜ்ஜி, ஆமை வடை (இந்த ஊர்கார்கள் பருப்பு வடையை தான் இப்படி சொல்ராய்ங்க), உளுந்து வடை என உடம்புக்கு நன்மை அளிக்கும் 😜 trans fat நிறைந்த அனைத்து சமாச்சாரங்களும் இங்குண்டு. வந்து சாப்பிட்டு தங்கள் தொப்பையை வளர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இளநீர் சர்பத்


வெயில் காலத்துல மதுரையில் இயற்கையான பானங்களுக்கு பஞ்சமேயில்லை. ப்ரூட் மிக்சர், பானகம், ஜிகர்தண்டா, மோர், சர்பத், பதநீர் என்று பல உண்டு. மேல மாசி வீதி தாண்டி போனால் தமிழ் சங்கம் சாலையில் ஜானகிராமன் உணவகத்திற்கு எதிரில் ஒரு ஸ்பெஷல் பானம் கிடைக்கும்.





இளநீர் மற்றும் அதனுள் இருக்கும் இளம் தேங்காயை கீரி சர்பத் மற்றும் ஐஸ் கலந்து இளநீர் சர்பத் என்ற பெயரில் சரவணன் என்பவர் விற்பனை செய்கிறார். எப்பொழுதுமே கூட்டம் இருக்கும். சர்பத் கொஞ்சம் குடிக்க தேங்காய் கொஞ்சம் கடிக்க என டேஸ்ட் செமயா இருக்கும். ஒரு கிளாஸ் விலை ஜஸ்ட் நாற்பது ரூபாய்தான். பேசி விட்டு காசு கொடுத்தால் வாங்க மறுத்துவிட்டார். நீங்க போனால் என் கிளாஸுக்கும் காசு கொடுத்துடுங்க 😉







கூகிலாண்டவர் வழிகாட்டி:

Monday, March 25, 2019

சிதம்பரம் மூர்த்தி காஃபே

நல்ல பரோட்டா சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. கடைசியாக சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் சுவைத்தது. நண்பர் ஒருவர் சிதம்பரம் மூர்த்தி காஃபே சென்னை அண்ணா நகரில் புதிய கிளை திறந்திருப்பதாகவும் சில நண்பர்களுடன் விருந்தளிக்க அழைத்திருந்தார்.

அண்ணா நகரில் ஆறாவது அவனியூவில் உள்ள குளுரூட்டப்பட்ட உணவகத்தில் மதிய வேளையில் நல்ல பசியுடன் நாங்கள் நுழைந்தோம். சனிக்கிழமையாக இருந்தாலும் உடனே அமர இடமும் கிடைத்தது.
மூர்த்தி காஃபேயில் கிடைக்கும் பரோட்டாவும் முட்டை சட்னியும் சிதம்பரம் பகுதியில் வெகு பிரபலம். அதனால் ஆளுக்கு ஒரு ஸ்பெஷல் பரோட்டாவும்(30₹) அனைவருக்கும் சேர்த்து ஒரு முட்டை சட்னியும்(120₹) ஆர்டர் செய்தோம். அதற்கு முன் ஒன் பை டூ மான்சோ சிக்கன் சூப்பும் ஹாட் அன்டு சவர் சிக்கன் சூப்பும் (90₹) வரவழைத்தோம்.


நண்பர் பெப்பர் பார்பகூ சிக்கன் ஹாப்(230₹) சொல்ல போட்டிக்கு நான் அரை சிக்கன் 88(200₹) சொல்ல, ஜெயித்ததென்னவோ அவர் தான். சிக்கன் 88யை தாறுமாறாக எண்ணையில் பொரிக்கப்பட்டு சிக்கன் சுவையே தெரியலை, கிட்டத்தட்ட வத்தல் மாதிரி இருந்தது. ஆனால் பெப்பர் பார்பகூ அருமை, அதிலும் மாயோவுடன் சாப்பிட வேற லெவல்.



சூப் ரெண்டுமே மோசமில்லை. இரண்டாக ஷேர் செய்திருந்தாலும் அளவு அதிகம். பரோட்டா பெரிதாக, செம சாஃப்ட். அது கூட சால்னாவும் தந்தார்கள். ஜெனரலா இந்த மாதிரி உணவகங்களில் தொட்டுக்க சால்னா (கேட்டாலும்) தரமாட்டார்கள். இங்கு கேட்காமலே கிடைத்தது, கூட ஒரு காரமான சிக்கன் க்ரேவியும் இலவசமாக வந்தது. முட்டை சட்னி ஆகா ஓகாவென்று இல்லை மிகுந்த ஏமாற்றம்.



கடைசியாக ஒரு முட்டை பிரியாணி வந்தது. உடன் வெங்காய பச்சடியும் கத்தரிக்காய் தொக்கும் வர, பிரியாணியுடன் அன்றைய கடமையை முடித்துக் கொண்டேன். பிரியாணி சூப்பர் என்று சொல்ல முடியாது, ஆனால் மோசமில்லை. நல்ல பசியுடன் வந்தால் கண்டிப்பாக ஏமாற்றம் அளிக்காது.



பில்லில் சர்வீஸ் சார்ஜ் இல்லை, வரி மட்டுமே. நான்கு பேருக்கு 1024₹ பரவாயில்லை. சர்வீஸ் மோசமில்லை, தண்ணீர்தான் நேரத்தில் வரவில்லை. உணவு பரிமாறிய வாங் சூவிற்கு நன்றி. பயபுள்ளை கொஞ்சம் தமிழ் பேசுனால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.

மொத்தத்தில் சிக்கன் 88, முட்டை சட்னி தவிர மற்றவை நன்றாகவே இருந்தது. கண்டிப்பாக பரோட்டாவுக்காக திரும்ப வரணும்.

Thursday, December 20, 2018

மதுரை பாண்டியன் ஹோட்டல்


அலுவலகத்தில் இரவு நேரம். என் பின்னாடி உட்கார்ந்திருந்த மக்கள் புதிதாக திறக்கப்பட்ட "மதுரை பாண்டியன் ஹோட்டல்" செல்வதாக பேசிக்கொண்டிருந்தனர். இந்த உணவகத்தை பற்றி பல முறை நண்பர்கள் கூற கேள்விப்பட்டதுண்டு. சிறுது நேரத்தில் அக்குழுவில் நானும் இன்னும் பிறரும் சேர்ந்து செம பசியோடு இரவு உணவருந்த கிளம்பினோம்.



ராமாபுரம் டி.எல்.எப் எதிரில் அமைந்திருக்கிறது பாண்டியன் ஹோட்டல். முதலில் ஆளுக்கோரு பன் பரோட்டா (ஒன்று 30₹) வந்தது. சைவ மற்றும் அசைவ சால்னா இரு சட்டிகளில் டேபிளில் வைத்தார் உணவு பரிமாறுபவர்.
பன் பரோட்டா சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நடுப்பகுதி சரியாக வேகவில்லை. மதுரையில் பன் பரோட்டா சாப்பிட்டவர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும்.




அடுத்து மட்டன் பிரியாணி(200₹) மற்றும் மட்டன் ஈரல் வறுவல்(180₹). வழக்கம் போல வெங்காயம பச்சடியும் கூடவே வந்தது. சீரக சம்பா பிரியாணி அட்டகாசம். மட்டன் பீஸ் ஒவ்வொன்றும் செம பிரஷ் அண்டு ஸாப்ட். இதுல நல்லி பீஸ் வேற நமக்கு வந்துச்சு. ஈரலோ வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை கலந்து ஃப்ரை செய்து அருமையாக இருந்தது. அடுத்த முறை வந்தால் இவ்விரண்டையும் ஆர்டர் செய்ய இப்பவே முடிவு செஞ்சாச்சு.
கடைசியாக ஒரு முட்டை லாபா(90₹). நல்ல கிரிஸ்பியாக வெங்காயம் கலந்த முட்டையை அடிச்சு ஸ்டப் செய்து சமைத்திருந்தனர். இது சைவ குருமாவோடவே அருமையாக இருந்தது. காரமான அசைவ சால்னா கூட எப்படி இருக்குமென நினைத்துப்பாருங்கள்.




கடைசியாக ரசம் ஒரு கப் வாங்கி இறக்கியாச்சு. இதுல வசதி என்னான்னு இங்கு சூப் வாங்க வேண்டிய தேவையே இல்லை. இலவசமாக கிடைக்கும் சூடான ரசமே காரமா அருமையா இருந்தது.

மொத்தத்தில் பன் பரோட்டாவை தவிர அனைத்துமே செம டேஸ்ட். சாப்பாடு கூட நல்லா இருக்குமென்று நண்பர் கூறினார். ஒரே பிரச்சினை என்னவென்றால் கூட்டம் அதிகமாக வருவதால் டேபிள் கிடைக்க வெயிட் பண்ணனும்.

Thursday, December 13, 2018

கேழ்வரகு மற்றும் அரிசி புட்டு

சிறு வயதில் நமக்கு கிடைத்த அரிய திண்பண்டங்களை இப்போது பார்த்தால் எப்படி இருக்கும். இன்று காலை காமராஜர் சாலையில் செல்லும் போது அரசமரம் பிள்ளையார் கோவில் எதிரில் உட்கார்ந்திருந்த பெரியவர் எதோ ஒன்றை விற்பனை செய்ததையும் சுற்றிலும் சிலர் அதை வாங்கி கொண்டிருந்ததையும் பார்க்க நேரிட்டது. பக்கத்தில் சென்றால், அரிசி மற்றும் கேழ்வரகு புட்டை பெரிய டபரா சட்டியில் வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தார்.


தொண்ணூருகளின் ஆரம்ப காலங்களில் பாண்டிய வேளாளர் தெரு சந்தையில் ஒருவர் தினமும் காலையில் இவ்விறு வகை புட்டுகளையும் விற்பார், அதை 25 பைசா கொடுத்து வாங்கி சாப்பிட்ட ஞாபகம். இப்போதெல்லாம் அவர் சந்தைக்கு வருவதில்லை. சென்னையில் எங்கும் இவ்வகை பண்டங்களை பார்த்தது இல்லை.




உதிர்ந்த கேழ்வரகு மற்றும் அரிசி புட்டுகளை தேங்காய் துருவல் சேர்த்து சில பாக்கெட்டுகள் (ஒன்று 10₹) வாங்கிய பின் வண்டியை வீட்டிற்கு திருப்பினேன். இரண்டுமே சுவை மிகுந்தவை, அதிலும் அரிசி புட்டு 👌👌👌

முக்கியமான விஷயம், காலையில்(6 - 8 மணி) மட்டுமே இது கிடைக்கும்.


Saturday, December 8, 2018

கூரை கடை பன் புரோட்டா

பரோட்டா கேள்விப்பட்டு இருப்பீர்கள். பன் புரோட்டா சுவைத்ததுண்டா. போன வாரம் தான் மதுரையில் அதை சுவைக்க நேரிட்டது.


ஓர் இரவு என் மச்சானுடன் பன் புரோட்டா கடையை நோக்கி ஒரு பயணம். அண்ணா நகர் ஆவின் பாலகம் அருகாமையில் உள்ள புகழ்பெற்ற பன் புரோட்டா கடை தான் செல்வதாக நினைத்தேன். ஆனால் மச்சானோ அது ரோட்டோரக் கடை அதனால் வேறு கடை செல்வோமென சொல்ல, வண்டியை ஆவின் சிக்னலில் இடது பக்க வாட்டில் சிவகங்கை ரோட்டில் திருப்பினேன்.




சிறிது தூரம் சென்றதும் (கோனார் மெஸ் தாண்டியதும்) வலது பக்கத்தில் ஒரு கூரை வேய்ந்த கடையை சுற்றி ஒரு கும்பல் நின்று கொண்டு இருந்தது. கடைக்கு பேர் கிடையாது. அதனால் மக்கள் கூரை கடை என்றுதான் அழைப்பார்கள்.





இருவரும் உள் நுழைந்து சாப்பிட இடத்தை பிடித்தோம். மிகச்சிறிய உணவகம். குடும்பதோடு செல்ல உகந்தது அல்ல. அதனால் தானோ என்னவோ பார்சலுக்கு நிறைய பேர் வந்திருந்தனர். இலை வைத்த பிறகு, ஆளுக்கு ரெண்டு புரோட்டாவும்(ஒன்று 15₹) பிறகு ஒரு மட்டன் சுக்காவும்(90₹), வழியல் (similar to scrambled egg..சென்னையில் கலக்கி என்றழைக்கப்படும்) மற்றும் ஆம்லெட் சொன்னோம்.





பன் புரோட்டா தாருமாறு டேஸ்ட். மேல் பகுதி மொறு மொறுப்பாகவும் உட்பகுதி மென்மையாகவும் மிக மிக அருமை. இங்கு விசேஷம் என்னவென்றால் புரோட்டாவிற்கு கொடுக்கப்படும் பல வகையான க்ரேவீஸ். பாயா, ஈரல் குழம்பு, எழும்பு குழம்பு மற்றும் குடல் குழம்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஈரல் குழம்பு தான் சிறிது உரைப்பு அதிகம்.
மட்டன் சுக்காவில் வெங்காயம் தான் அதிகம், ஆனால் சுவையில் எந்த குறையுமில்லை.





அது என்ன மாயமோ தெரியலை, மதுரையில் மட்டும் புரோட்டாவிற்கும் கூட கொடுக்கற சால்னாவிற்கும் அப்படி ஒரு சுவை. சென்னையில் அப்படி ஒரு சுவையான பரோட்டாவை பார்த்தும் இல்லை சுவைத்தும் இல்லை. எப்படியோ திரும்ப சென்னை வந்தாச்சு. அடுத்த முறை மதுரை போனால் விளக்குதூண் அசோக் புரோட்டா கடை தான் ப்ளான். அதை பற்றி அடுத்த ட்ரிப்பிற்கு பின் எழுதுகிறேன்